முஹம்மது நபி ஸல் அவர்களின் எளிமையான வாழ்க்கை....
#முஹம்மது_நபி_ஸல்_அவர்களின் #எளிமையான_வாழ்க்கை....
மக்காவில் செல்வந்தராக வாழ்ந்தார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.தனது 40 வது வயதில் ஹிரா குகையில் நபித்துவம் பெற்றார்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க ஓர் இறைக்கொள்கையை எடுத்துரைத்ததால் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.....
அவர் இறைத் தூதர் என்று கூறுவதையும் தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர் தப்பித்திருக்க முடியும்.....
ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள்....
ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓரு ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்கு திரட்டியிருக்க முடியும் ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது....
* இந்த நிலையிலும் அவர்கள் தமக்காக செல்வம் திரட்டவில்லை.
*அரண்மனையில் வசிக்கவிலிலை.
*கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.
* அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிடவில்லை.
* ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.
* வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.
* தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள்.
* ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது எனடறு பிரகடனம் செய்தார்கள்.
நபிகளாரின் எளிமையான வாழ்க்கையை விளக்கும் ஹதீஸ்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்' எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழல் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள் : திர்மிதி 2299.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர்(ஸல்)அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
நூல்: புகாரி - 6456.
அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) எங்களிடம் ஒட்டுப் போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக் காட்டி, 'இதை உடுத்திக் கொண்டிருக்கும்போது தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்" என்று கூறினார்கள்.
நூல்: புகாரி - 3108.
மக்களிடம் மரியாதையை எதிர்பார்க்காதவர்கள்:
மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஆளும் மன்னராக இருந்த போதிலும் எளிமையான வாழ்க்கையையே நபிகளார் மேற்கொண்டார்கள்.அவற்றில் சில,
*நபிகளார்க்குப் பல்லக்கு இருக்கவில்லை!
*அவர்களுக்கு வாயிற் காப்போன் இருக்கவில்லை!
*காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை!
*தமக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்!
*“இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்” என்று எச்சரித்தார்கள்!
மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர்கள் விரும்பவில்லை, மக்களிடம் பெற்றதுமில்லை. எளிமையின் அடையாளம் முஹம்மது நபி ஸல் அவர்கள் மட்டுமே என்றுரைப்பது மிகையாது.
Comments
Post a Comment